குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்
கடலூரில் நடைபெற்று வரும் குறுவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
கடலூர்
கடலூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தொடங்கி வைத்தார். இதில் கடலூர் குறுவட்டத்தை சேர்ந்த 40 பள்ளிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
முதலில் மாணவ-மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்டங்கள், தடை தாண்டி ஓடுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு, குண்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் தனித்தனியாக நடந்தது.
நேற்று மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதில் வாலிபால், கபடி, கால்பந்து, ஆக்கி, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இன்றும் (புதன்கிழமை) மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது. தொடர்ந்து இந்த போட்டிகள் வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.