சிமெண்டு கலவை வாகனம் கவிழ்ந்து தொழிலாளி பலி
ஆண்டிப்பட்டி அருகே சிமெண்டு கலவை வாகனம் கவிழ்ந்து தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானாா். அவர் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு கட்டும் பணி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மேக்கிழார்பட்டி கிராமம் அருகே நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடப்பணிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த கட்டிடத்தின் பில்லர் போடும் பணிக்காக தேனி, அன்னஞ்சி அருகே வடவீரநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிமெண்டு கலவை எந்திரத்தின் மூலம் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது.
தொழிலாளி பலி
இந்த பணியில் வடவீரநாயக்கன்பட்டியை சேர்ந்த காளிராஜ் என்பவரின் மகன் கோபி (வயது 20) என்பவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென்று சிமெண்டு கலவை எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் எந்திரத்தின் அடியில் சிக்கிய கோபி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே சக தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கோபியின் உடலை மீட்டனர்.
உறவினர்கள் போராட்டம்
தகவலறிந்து அங்கு வந்த கோபியின் உறவினர்கள், தொழிலாளர்கள் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, உறவினர்களிடமும், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கோபியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.