சமூகநீதியில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை -கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
சமூகநீதியில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூகநீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல்காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூகநீதி நிலைநாட்ட முடியும். கடந்த 2008-ம் ஆண்டு பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது.
பா.ஜ.க., என்றைக்குமே உயர் சாதியினர் ஆதரவு அமைப்பாக இருந்திருக்கிறதேயொழிய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சமூகநீதி கொள்கையை முழு மனதோடு ஏற்றுக்கொண்டதில்லை.
அடுத்து வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிறபோது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூகநீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.