தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்


தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்
x

காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி

அத்துமீறிய நடவடிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் தர்மபுரியில் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.9 ஆயிரம் கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் மேகதாது அணை தொடர்பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் அறிவிப்பு வெளியிட்டதை அத்துமீறிய நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டித்தது.

தண்ணீர் உரிமை

தமிழக அரசும் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்ததோடு, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு விசாரணையின்போது, மேகதாது அணை கட்டுவது குறித்து எந்த விவாதமோ, முடிவோ ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதோடு வருகிற 26- ந்தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

எனவே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்தின் பாசன உரிமையை மறுத்து உபரி நீரை மட்டும் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கிறது.

கனமழை காலத்தில் வரும் உபரிநீரையும் தடுக்கும் வகையில் தான் மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு மத்திய அரசு துணை போகாமல் காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பாதுகாக்க வேண்டும். கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.


Next Story