தமிழக கல்வி மேம்பாட்டுக்கு 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.6,664 கோடி நிதி ஒதுக்கீடு -அண்ணாமலை


தமிழக கல்வி மேம்பாட்டுக்கு 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.6,664 கோடி நிதி ஒதுக்கீடு -அண்ணாமலை
x

தமிழக கல்வி மேம்பாட்டுக்கு 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.6,664 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துகளை முன்வைத்தார். அதை தெளிவுப்படுத்த வேண்டியது தமிழக பா.ஜ.க.வின் கடமையாக கருதுகிறோம். தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார். உண்மைதான்.

1800-ம் ஆண்டுகளின் தொடக்க காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது. ஆனால் இன்றோ, தமிழகத்தில் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016-ம் ஆண்டு 1,65,417 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2020-ம் ஆண்டு அது 85,747 ஆக குறைந்துவிட்டது. சுமார் 50 சதவீத வீழ்ச்சி.மேலும் 2021-ம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயர் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 38 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தது. தனது உரையை முடிக்கும்போது அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்‌ஷா நிதி மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.6,664 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story