தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு...! இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள், சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட போலீஸ் நீச்சல் வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் 30 பேர் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசயைில் நகர்ந்து வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,
வரும்16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அந்தமான் அருகே வரும் 16-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.