நீலகிரி உள்பட 5 இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு


நீலகிரி உள்பட 5 இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
x

நீலகிரி உள்பட 5 இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை,

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காராணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சில இடங்களில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் அதிகபட்சமாக 18 செ.மீ. மிக கனமழை பதிவானது.

அதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 'கூடலூர் பஜார் 18 செ.மீ., மேல் கூடலூர் 16 செ.மீ., தேவாலா 15 செ.மீ., மேல் பவானி 13 செ.மீ., அவலாஞ்சி 12 செ.மீ., பந்தலூர் தாலுகா அலுவலகம் 10 செ.மீ., நடுவட்டம் 9 செ.மீ., ஹரிசன் மலையாளம் லிமிடெட், சேரங்கோடு தலா 8 செ.மீ., கிளென்மார்கன் 7 செ.மீ., பார்வூட், சின்னக்கல்லாறு தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது.


Next Story