தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (சனிக்கிழமை) தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்த முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இயல்பையொட்டி மழை இருக்கும்
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்பட தென் இந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பையொட்டியே பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.