தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு
x

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அது இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி (நாளை) உருவாக வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும் மழை

இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நாளை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இதே போன்று, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளிலும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அதிகபட்சமாக 9 செ.மீ. மழை

நேற்று மதியம் 1 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வாலிநோகம் 7 செ.மீ., வேதாரண்யம், சோழவரம், திருமூர்த்தி அணை, வால்பாறை, உளுந்தூர் பேட்டை, சேரன்மகாதேவி, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இதே போன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 முதல் 4 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story