குடிநீர் குழாய்கள் பதிக்க போக்குவரத்தில் மாற்றம்
ராமநாதபுரத்தில் ரூ.30 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைத்து பதிக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் ரூ.30 கோடியில் நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைத்து பதிக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள்
ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமான பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களினால் தாமதமானது.
போக்குவரத்து மாற்றம்
பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் ஒரு ஓரத்தில் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மற்றொரு புறத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பால தூண்களுடன் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பால பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் பாலம் அமைய உள்ள பகுதியில் காவிரி குடிநீர் குழாய்கள் செல்வதால் அதனை மாற்று இடத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் ராமேசுவரம் நகராட்சி பகுதிகள், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், நயினார்கோவில் மற்றும் போகலூர் ஒன்றிய ஊரக குடியிருப்புகளுக்கு 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி மேம்பாலம் பணிகள் நடைபெறும் வழியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.