கோர்ட்டில் வாலிபர் சரண்
ரூ.11 லட்சம் கொள்ளை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
காரைக்குடி,
காரைக்குடி செக்காலை வீதியில் தனியார் நிறுவனம் சிகரெட் மொத்த வியாபாரம் செய்து வந்தது. இங்கு வேலை பார்த்து வந்த விக்னேஷ் (வயது 32), தமிழரசன் (27) ஆகியோர் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிகரெட் வியாபாரம் செய்து வசூலான ரூ.11 லட்சத்தோடு வந்து கொண்டிருந்தனர். கோட்டையூர் அருகே வரும்போது காரில் வந்து வழி மறித்த 5 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.
இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி கரூர் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த காளீஸ்வரன் (27), கிஷோர் குமார் (22), அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் அப்துல்சலாம் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்பட்ட காளையார்கோவிலை சேர்ந்த கார்த்தி (28) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோர்ட்டில் சரணடைந்தார்.