சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு
திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை குறித்து சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்டல பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுடன் திட்ட பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குராலா தலைமை தாங்கினார். கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்தும், வரி மற்றும் வரியற்ற இனங்கள் வசூல் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.முன்னதாக தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, திருநாகேஸ்வரம் ஆகிய பேரூராட்சிகளில் சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.ஆய்வின்போது தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பேரூராட்சி செயலாளர் அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.