சென்னை விழாவில் பங்கேற்க வரும்ஸ்டெர்லைட் உரிமையாளருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்:தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு


சென்னை விழாவில் பங்கேற்க வரும்ஸ்டெர்லைட் உரிமையாளருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்:தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:45 PM GMT)

சென்னை விழாவில் பங்கேற்க வரும் ஸ்டெர்லைட் உரிமையாளருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறிவித்து உள்ளனர்.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மெரினா பிரபு, மகேஷ் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கால் நூற்றாண்டு காலம் அடைந்த, அடையும் துன்பங்களை நாடே அறியும். எங்கள் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், வருங்காலத்தையும் அழிக்கும் இந்த திட்டத்தை தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி 2018-ம் ஆண்டு தூத்துக்குடி குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 17 இடங்களில் 100 நாட்கள் அறவழி போராட்டம் நடந்தது. 100-வது நாளை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக மக்கள் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்து உள்ளன. தூத்துக்குடி படுகொலை தமிழகமெங்கும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே அமைந்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தாவின் உரிமையாளர் அனில் அகர்வால் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வருகிறார். அவர் சென்னைக்கு வருவதற்கு நாம் உடன்பட முடியாது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அவரது வருகையை கடுமையாய் எதிர்க்கிறது. மாநிலம் தழுவிய தமிழ் மக்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்கு பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை திட்டமிடுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் மற்றும் குடிமை சமூக அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் எங்களுக்கு உதவிட வேண்டும். மேலும் அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக இழுத்து மூட, வேதாந்தாவை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story