சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மகா தரிசனம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மகா தரிசனம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 Feb 2023 10:07 PM GMT (Updated: 8 Feb 2023 10:23 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மகா தரிசனம்

சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி தைப்பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. பின்னர் 5-ந் தேதி தேர் வடம் பிடிக்கப்பட்டு மறுநாள் 6-ந் தேதி மாலையில் நிலை சேர்க்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு தெப்போற்சவம் மற்றும் பூதவாகன காட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்காக நூற்றுக்கணக்கான வகைகளை கொண்ட மலர்கள் கொண்டு வரப்பட்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் மகா தரிசனம் நடைபெறுகிறது. அப்போது நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

பின்னர் 4 ராஜ வீதிகள் வழியே திருவீதி உலா வந்து நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்கு உற்சவர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

மகா தரிசனத்தை முன்னிட்டு காங்கேயம், ஊத்துக்குளி, பெருந்துறை, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பலத்த போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னிமலையில் ஆய்வு செய்தார்.


Related Tags :
Next Story