தீட்சிதர்கள் தொடரும் எதிர்ப்பு...! திணறும் அதிகாரிகள்..! சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..?


தீட்சிதர்கள் தொடரும் எதிர்ப்பு...! திணறும் அதிகாரிகள்..! சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..?
x
தினத்தந்தி 7 Jun 2022 8:25 AM GMT (Updated: 7 Jun 2022 8:26 AM GMT)

எதிர்ப்பை மீறி அறநிலையத்துறையிடம் உள்ள கோவில் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் (புதன்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து, சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு இன்று காலை தொடங்கியது. அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்விற்கு சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் உடன் நேற்று அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக, அறநிலையத்துறை கோயில் நிர்வாக வருவாய் அலுவலர் சுகுமார், துணை ஆணையர் அரவிந்தன், இணை ஆணையர்கள் லெட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் அடங்கிய கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான அறநிலையத்துறையால் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர், இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றனர்.

ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடராஜர் கோவில் கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

எனினும், எதிர்ப்பை மீறி அறநிலையத்துறையிடம் உள்ள கோவில் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த தீட்சிதர்கள், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி வரவு,செலவு கணக்குகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்த குழு, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், சட்டப்படி அமைக்கப்பட்ட குழு ஆய்வுக்கு வந்தால், ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தீட்சிதர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனிடையே, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்;-

"சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் சட்டத்தின்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நேற்று தீட்சிதர்களை சந்தித்து அன்பாக கோரிக்கை வைத்தோம், கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறினோம்.

மதுரை ஆதீனம் விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி நடத்தப்படுகிறது. மதுரை ஆதீனம் அரசியல்வாதியாக செயல்படுகிறார்.

மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். முதலமைச்சரின் அறிவுரைப்படி அமைதியாக செயல்பட்டு வருகிறோம்" என்றார்.


Next Story