தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதம் என கூற முடியாது - மதுரை ஐகோர்ட்டு
தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதம் என்று கூற முடியாது என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது 10 வயது மகனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, கடந்த 31-ந்தேதி மனுதாரர் மகன் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் 10 வயது மகன் அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளார். தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதமாக கருத முடியாது. எனவே இந்த வழக்கில் இந்த கோர்ட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனுதாரர் தனது மகனை சந்திக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட்டில் முறையிடலாம். இந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.