'மிசா காலத்தில் சிறையில் என் மீது விழ வேண்டிய அடிகளை வாங்கியவர் சிட்டிபாபு' - முதல்-அமைச்சர் பேச்சு
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் நான் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அண்ணா நகர் மற்றும் கொளத்தூர் பகுதியை இணைக்கும் வகையில் ரூ.61.98 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
"முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் நான் இல்லை. எதிர்கட்சி தலைவராக இருந்த போது பேசலாம் வாங்க என்ற தலைப்பில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளேன்.
மக்களை சந்தித்து என்னால் முடிந்தவரை கோரிக்கைகளை நிறைவேற்றினேன். நான் மேயராக இருந்த போது ஒரு ஆண்டில் கட்டப்பட வேண்டிய பாலத்தை 9 மாதங்களில் கட்டி முடித்தேன். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
நான் முதல்-அமைச்சராக ஆனதற்கு கொளத்தூர் தொகுதி மக்கள் அளித்த மிகப்பெரிய வெற்றிதான் காரணம். மூன்று முறை என்னை வெற்றி பெற வைத்தவர்கள் கொளத்தூர் மக்கள். கொளத்தூர் தொகுதிக்கு வருவதை கடமைகளை செய்துவிட்டு, சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன்.
இந்த மேடையில் நான் நின்று பேச காரணமாக அமைந்தவர் அண்ணன் சிட்டிபாபு. மிசா காலத்தில் என்னுடன் சிறையில் இருந்து என் மீது விழ வேண்டிய அடிகளை வாங்கினார்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.