கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைப் பெருவிழா


கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைப் பெருவிழா
x

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைப் பெருவிழா நாளை மறுநாள் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த திருவிழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்வார்கள்.

சாகை வார்த்தல்

இத்தகைய புகழ்பெற்ற திருவிழா இந்த ஆண்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். மறுநாள் அதாவது 3-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடக்கிறது. இவ்விழாவையொட்டி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

சுத்தம் செய்யும் பணிகள்

இதற்காக நேற்று கூத்தாண்டவர் கோவிலை சுத்தம் செய்து வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கியுள்ளது. கோவிலின் மூலஸ்தானம், பிரகாரம், கோவில் வளாகம், முகப்பு பகுதி மற்றும் கோவில் அலுவலகம், கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் தண்ணீர் ஊற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் கோவில் கட்டிடத்தின் சுவர்களிலும் தண்ணீர் ஊற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் கோவில் கட்டிடம் முழுவதும் வர்ணம் தீட்டப்பட உள்ளது. அதுபோல் தேர் நிறுத்தக்கூடத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் மதனா, ஆய்வாளர் செல்வராசு மற்றும் கிராம பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story