சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம்..!


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம்..!
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது.

சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story