மண் அள்ளி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்


மண் அள்ளி வந்த லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்
x

அய்யலூர் அருகே மண் அள்ளி வந்த லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே உள்ள குளத்துப்பட்டியில் மயானம் உள்ளது. இங்கு குளத்துப்பட்டி மற்றும் கோடாங்கிசின்னான்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த மயானத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இதற்காக லாரிகள் மயான பாதை வழியாக சென்று வருகிறது. இதனால் மயான பாதை சேதம் அடைவதாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மயான பாதையில் முள்செடிகளை வெட்டிப்போட்டு மண் அள்ளிச் சென்ற 2 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயானத்தின் வழியே லாரிகள் செல்லக்கூடாது என்று நில உரிமையாளரை எச்சரித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story