திருத்தணி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு


திருத்தணி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

திருத்தணி அரசு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணியில் சுப்பிரமணிய சாமி அரசு கலைகல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 4 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசாரை கண்டதும் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் மாணவர்களிக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளால் முதலாம் ஆண்டு மாணவர்களை பயங்கரமாக தாக்கி உள்ளனர்.

இதில் அரக்கோணம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 20), கணேஷ் (21) இருவரும் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மாணவர்களை தாக்கிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story