பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி மும்முரம்


தினத்தந்தி 10 Jun 2023 6:38 PM GMT (Updated: 10 Jun 2023 6:54 PM GMT)

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

புதுக்கோட்டை

பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இருப்பினும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவ-மாணவிகள் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதை மீண்டும் தமிழக அரசு தள்ளி வைத்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும் (திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

துப்புரவு பணி

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அன்னவாசல் பகுதியில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி, புல்வயல், கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்தி துப்புரவு பணி செய்யப்பட்டது.

பள்ளியின் முன்பகுதி, விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் இருந்த குப்பைகள், செடி, கொடிகள், புற்கள் அகற்றப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் ஸ்மார்ட் டி.வி., கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள், மின் சாதனங்கள் பொருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.


Next Story