பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டிவனத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டிவனத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி திண்டிவனத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 33 வார்டுகளை உள்ளடக்கியது. இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு 65 பெண்கள் உள்பட 175 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 3-வது பிரிவை தற்போது பழைய நகராட்சி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதை கண்டித்தும் கடந்த 5 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட எவ்வித பணி பாதுகாப்பும் ஏற்படுத்தி தரவில்லை, குப்பைகளை அப்புறப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைக்கப்படுவதாக கூறி நேற்று காலை திண்டிவனம் காந்தி சிலை முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக கூறினர். இதையேற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் அங்கு வந்து துப்புரவு பணியாளர்களை சமாதானப்படுத்தினார்.

பின்னர் திண்டிவனம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள், துப்புரவு தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துப்புரவு தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை சரமாரியாக தெரிவித்தனர். இதையடுத்து நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் உங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுங்கள், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story