கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மும்முரம்


அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்களின் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடுதல் டாக்டரை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

அரசு மருத்துவமனை

கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருத்துவமனையில் 3 டாக்டர்கள் பணியிடம் இருந்த போதும் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மேலும் மருத்துவ உபகரணங்கள் ஏதும் செயல்பாட்டில் இல்லை.

தாலுகா மருத்துவமனைக்கான எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும், மருத்துவமனை வளாகம் முட்புதர்கள், செடி கொடிகள் மண்டி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. உயர் கோபுர மின்விளக்கும் எரியாததால் மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

பேச்சுவார்த்தை

இதனைதொடர்ந்து கறம்பக்குடி அனைத்துக்கட்சிகள், சமூக நல அமைப்புகள் மற்றும் வர்த்தக, வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கறம்பக்குடி மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக தனி சமூக வலைத்தள குழு உருவாக்கப்பட்டு தாலுகா முழுவதும் இளைஞர்கள் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 13-ந் தேதிக்குள் மருத்துவமனை தூய்மைப்படுத்தப்படும், கூடுதல் டாக்டர் பணியமர்த்தப்படுவார்கள், மருத்துவ உபகரணங்கள் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

தூய்மை பணி மும்முரம்

இந்தநிலையில், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள முட்புதர்கள் அகற்றி கட்டிடங்களில் படர்ந்திருந்த செடி கொடிகளை அழித்தனர். மேலும் செயல்படாமல் இருந்த உயர் கோபுர மின்விளக்கு சீரமைக்கப்பட்டு தற்போது ஒளிர்கிறது.

இதேபோல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் கூடுதல் டாக்டர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story