விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீதுஅலுவலர்கள் நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும்கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுரை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது அலுவலர்கள் நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுரை வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் கடந்த 31-ந் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 271 மனுக்களில் 240 மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- விவசாயிகளிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு உரிய காரணங்களுடன் மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் ஏரி, கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா வழங்குதல், நீர்வழிப்பாதைகளை சீரமைத்தல், பயிர்கடன், தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடை செய்தல், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடை செய்தல், தோட்டக்கலைத்துறை சார்பில் நாற்றுகள் வழங்குவது, கால்நடைத்துறை சார்பில் கிளை கால்நடை மருந்தகம் தொடங்குதல், விவசாய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் பதில் அளித்துள்ளனர்.
நேரடி கள ஆய்வு
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் கிருஷ்ணகிரி அணை, தமிழ்நாடு ஊரக விரிவாக்க பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சமையலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்றுனர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலும் பயிற்சி குறித்த குறும்படத்தையும் பார்வையிட்டார்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தொடர்ந்து ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்கள் உயர் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் மகேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குனர்கள் பெரியசாமி, ஜாகீர் உசேன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.