ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு
ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
ஈரோடு வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
அடர்புகையால் சிரமம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வைராபாளையம், வெண்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை உரமாக மாற்றப்படுகிறது. இதனால் குப்பை கிடங்குகளுக்கு வரும் குப்பைகளின் அளவு குறைந்தது. மேலும், வைராபாளையம் குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் சலித்து எடுக்கப்பட்டு எறியூட்டப்பட்டது. அதில் இருந்து கிடைக்கும் மூல பொருட்களை பயன்படுத்தி கற்கள் தயாரிக்கப்பட்டன.
வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பை தேங்கி இருந்ததால், அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து அடர்புகை வெளிவந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் தீயணைப்பு படை வீரர்களும் அடிக்கடி அங்கு சென்று தீயை அணைத்து வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் குப்பைகளை அகற்றும் வகையில் வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் உலர் கழிவு சலித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். அப்போது அவர், குப்பை கிடங்கையும் பார்வையிட்டார்.
இதேபோல் வைராபாளையத்தில் ரூ.1 கோடியே 78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உலர் கழிவுகளை எறியூட்டும் கட்டமைப்பையும், ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் உலர் கழிவுகளை எறியூட்டும் கட்டமைப்பு அமைக்கும் பணியையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். முன்னதாக ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் ரூ.29 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் காய்கறி சந்தை கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், துணை ஆணையாளர் சுதா, மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.