குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு


குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:46 PM GMT)

கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைக்கும் இடத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் அரசு விதை பண்ணைக்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பகுதியில் கடலூர் மாநகராட்சிக்கான குப்பை கிடங்கு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இருப்பினும் விதை பண்ணைக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்கு அமைக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுபற்றி அறிந்த வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்று கலெக்டர் அருண்தம்புராஜிடம், குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

திடக்கழிவு மேலாண்மை

அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் விவசாயத்தை நம்பி பெரும்பாலானோர் வாழ்ந்து வரும் நிலையில், இங்கு குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் மாசடையும். மேலும் விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்கும் பணியை தவிர்த்து, அதற்கு பதிலாக அரசின் வேறு திட்டங்களை இந்த பகுதிக்கு கொண்டு வந்து செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள் என்றனர். அதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் பதிலளித்து கூறுகையில், இந்த பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைத்து எந்தவித பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்த உள்ளது. இருப்பினும் உங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story