முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் ஆய்வு


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் ஆய்வு
x

ஜெயங்கொண்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு) மற்றும் (வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 464 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின்கீழ் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 443 பள்ளிகளில் பயிலும் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினையும் சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.


Next Story