போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்


போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
x

பெரம்பலூரில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு கலெக்டர் பாடம் நடத்தினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி தொடங்கி கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வந்தனர். இதையடுத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) நிறைவடைவதையொட்டி கடந்த 2 நாட்களாக காலையில் மாதிரி தேர்வுகளும், மாலை நடைபெறும் வகுப்பில் காலை நடைபெற்ற தேர்வுக்கான பதில் மற்றும் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நேற்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மாலை நேர பயிற்சி வகுப்பினை நடத்தினார். மாணவர்களுக்கு அனாடமி-பிஸியாலஜி தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் கலெக்டர் பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தார்கள்.


Next Story