என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தேர்வு அறையில் கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டதால் மனம் உடைந்த காங்கயத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர்

தேர்வு அறையில் கண்காணிப்பாளர் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டதால் மனம் உடைந்த காங்கயத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாளையங்கோட்டை சாலை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீகவி (வயது 22). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அப்போது மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு அறைக்குள் தனது செல்போனை எடுத்துச் சென்றுள்ளார்.

இதனை கவனித்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர், ஸ்ரீகவியிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு விளக்க கடிதம் ஒன்று எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ேமலும் 15 நாட்கள் கழித்து செல்போனை திரும்ப வாங்கிக்கொள்ளுமாறு ஸ்ரீகவியின் பெற்றோரிடம் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் ஸ்ரீகவி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஸ்ரீகவி துணிகளை துவைத்து, பின்னர் அதை அவரது தாயாரிடம் கொடுத்து கீழே காய போட்டு வருமாறு சொல்லியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் துணிகளை எடுத்துக்கொண்டு கீழே சென்று காய போட்டுவிட்டு மேலே வந்தார். பின்னர் ஸ்ரீகவியின் அறைக்குச்சென்று பார்த்தபோது அங்கு ஸ்ரீகவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகவியின் பெற்றோர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீகவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story