வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரருக்கு கமிஷனர் பாராட்டு


வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரருக்கு கமிஷனர் பாராட்டு
x

ஜாபர்கான்பேட்டையில் தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவனை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், காணும் பொங்கல் அன்று அப்பகுதியில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பினான். வீட்டுக்கு தாமதமாக வந்ததால் சிறுவனை, அவரது தந்தை கண்டித்தார். இதனால் அந்த சிறுவன், கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். இது குறித்து குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார்.

இந்த நிலையில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் தனியாக நடந்து சென்ற சிறுவனை பிடித்து சூளைமேடு ரோந்து வாகன போலீஸ்காரர் சுரேஷ் விசாரித்தார். இதில் அந்த சிறுவன் ஜாபர்கான்பேட்டையில் மாயமான சிறுவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். மாயமான சிறுவனை ஒரு மணி நேரத்தில் மீட்க உதவிய போலீஸ்காரர் சுரேசை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Next Story