தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் கானார்பட்டி பஞ்சாயத்து தெற்கு காலனி தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இன்னும் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே, அந்த தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். மாரியப்பன், கானார்பட்டி.
ஆபத்தான கட்டிடம் அகற்றப்படுமா?
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு நேதாஜி தெருவில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அதன் அருகில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதில் குழந்தைகள் படித்து வருகின்றனர். பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான கட்டிடத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?. மாரிமுத்து, பெருமாள்நகர்.
குண்டும் குழியுமான சாலை
விக்கிரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பிருந்து காந்திநகர் வரையிலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். சண்முகம், விக்கிரமசிங்கபுரம்.
பஸ் நிறுத்தம் தேவை
சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே, அங்கு பஸ் நிறுத்தம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்வார்களா?. ஜெரோ, சேரன்மாதேவி.
சாலை வசதி அவசியம்
களக்காடு மூங்கிலடியில் தென்கால் பாலம் புதிதாக கட்டப்பட்டது. எனினும் பாலத்தின் இருபுறமும் தார் சாலை அமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் வனத்துறை அலுவலகம், தலையணை மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். எனவே, பாலத்தின் இருபுறமும் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். பிரின்ஸ், களக்காடு.
சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை சாந்திநகர் தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள காலி இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அவற்றை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இசக்கிமுத்துராஜா, சாந்திநகர்.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடல் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த தொட்டியின் கைப்பிடிச்சுவர், படிக்கட்டுகளில் விரிசல் விழுந்தும், கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும் உள்ளது. எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். காதர் மீரான், மேலப்பாளையம்.
திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் மின் இணைப்பு பெட்டி திறந்து கிடக்கிறது. இதன் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. எனவே, மின்இணைப்பு பெட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். திருக்குமரன், கடையம்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்
காயல்பட்டினம் நகராட்சி 9-வது வார்டு லட்சுமிபுரத்தில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். சண்முகவேல், காயல்பட்டினம்.
வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக மேற்கு பகுதியில் இருந்து கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் வரையிலும் 9 இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு வெள்ளைநிற வர்ணம் பூசாததால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, வேகத்தடைகளுக்கு வெள்ளைநிற வர்ணம் பூசுவதுடன், எச்சரிக்கை பலகைகளும் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். பாலமுருகன், கோவில்பட்டி.
மின்விபத்து அபாயம்
தூத்துக்குடி மில்லர்புரம் டி.எம்.பி. காலனி பகுதியில் உயரழுத்த மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மரக்கிளைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்றல் அரசி, தூத்துக்குடி.