மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி


மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி
x

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், நடைபெறும் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இதையொட்டி, கட்சி அலுவலகம் முழுவதும் நிர்வாகிகள்-தொண்டர்கள் குழுமியிருந்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்தது. எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்பு செயலாளர் தங்கமணி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வளர்மதி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டணி குறித்து விமர்சிக்க வேண்டாம்

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மதுரையில் நடைபெறும் மாநாட்டை மிகவும் எழுச்சியாக நடத்த வேண்டும். அந்த மாநாடு அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திட வேண்டும்.

இப்போதைய சூழ்நிலையில் கூட்டணி குறித்து யாரும் எந்தவித விமர்சனமும் செய்ய வேண்டாம். கருத்துகளும் கூற வேண்டாம். அதனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கட்சி பணிகளை மட்டும் திறம்பட செய்திடுங்கள்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட வேண்டும். அதில் தலைவர், செயலாளர், பொருளாளர், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை போன்ற பொறுப்புகளில் நிர்வாகிகளை விரைவில் நியமிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்வதையே அ.தி.மு.க. விரும்புகிறது என்ற வகையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு இருந்ததாக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

மதுரையில் மாநாடு

கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

* அ.தி.மு.க. சார்பில் ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது.

* நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பூத் கமிட்டிகளை விரைந்து அமைக்க வேண்டும். 2 கோடி புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும்.

* தி.மு.க. ஆட்சியின் அராஜகங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதை கண்டிக்கிறோம்.

* எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி

* ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

* விலைவாசி, சொத்துவரி, குடிநீர் வரி மற்றும் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி சுமைகளை மக்கள் மீது திணித்துள்ள தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

* தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டு கட்சிக்கு துரோகம் இழைத்து வருவோருக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைந்து தக்க பாடம் புகட்டிட சூளுரை ஏற்போம்.

* நாடாளுமன்ற தேர்தல், அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறவும், தேர்தல்களிலும் முழுமையான வெற்றியை ஈட்டி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வின் நல்லாட்சி மீண்டும் மலரவும் சூளுரை ஏற்போம்

இவை உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்மகன் உசேனுக்கு கார்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து, கட்சி பணிகளை சிறப்பாகவும், விரைந்தும் ஆற்றுவதற்கும் ஏதுவாக கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு புதிய கார் ஒன்றை எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த காரின் பதிவு எண் 'டி.என்.06 ஏ.இ.5666' ஆகும். அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு இனி இந்த காரில்தான் தமிழ்மகன் உசேன் பயணம் செய்ய உள்ளார்.


Next Story