பாதுகாப்பு தடுப்புவேலி அமைத்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுங்கள்; ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி வாய்மொழி உத்தரவு


பாதுகாப்பு தடுப்புவேலி அமைத்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுங்கள்; ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி வாய்மொழி உத்தரவு
x

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்ற இடத்தில் பத்திரிகையாளர் விழுந்து பலியான சம்பவத்தின் எதிரொலியாக, பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புவேலி அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை

பத்திரிகையாளர் பலி

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. 80 முதல் 90 சதவீதம் வரையிலான பணிகள் முடிவு பெற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை ஜாபர்கான் பேட்டை, காசி திரையரங்கம் அருகில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

வாய்மொழி உத்தரவு

ஏற்கனவே மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளில் தோண்டப்பட்டு இருக்கும் பள்ளங்களை அப்படியே விட்டுவிடக்கூடாது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக, கடந்த 7-ந்தேதி அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இடங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுசெய்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டுவரும் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும், அவசர வாய்மொழி உத்தரவை நேற்று மீண்டும் பிறப்பித்திருக்கின்றனர்.

தடுப்பு வேலி

அதில், 'மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இடங்களில் பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைத்துதான் பணிகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு பாதுகாப்பு தடுப்பு வேலி மேற்கொள்ளப்பட்டதற்கான விவரங்களை புகைப்படங்களாக எடுத்து அனுப்பிவைக்கவேண்டும்.

ஒருவர் அதில் விழுந்து பலியாகியிருக்கும் சம்பவத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொண்டு அனைவரும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story