ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்


ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவாஜி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.பி. பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தினால் எந்த விழாக்களும் கொண்டாடப்பட வில்லை. ஆடிக்கிருத்திகையையொட்டி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அவர்களுக்கு குடிநீர், மலை சுற்றும் பாதையை சுத்தம் செய்தல், மலை சுற்றி வரும் பாதை முழுவதும் தெரு விளக்குகள் பொருத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு செயல்படும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த கோவிலில் மூலவர் சிலைகள் அடிக்கடி திருட்டு போவதாக சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

எனவே எனது சொந்த செலவில் திண்டுக்கல்லில் இருந்து மெகா சைஸ் பூட்டு வரவழைத்து வழங்குகிறேன். இனியும் திருட்டு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story