வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்;தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின


வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்;தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின
x

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடின.

தற்செயல் விடுப்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒருநாள் வருவாய்த்துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்ட கலெக்டா் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறையினர் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த அலுவலகங்களிலும் அதிகாரிகள் யாரும் இல்லாமல் வெறிச்சோடியது.

கோரிக்கைகள்

இந்த போராட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன உள்பட மொத்தம் 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் மொத்தம் 445 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அரசு அலுவலக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதிகாரிகளை சந்திக்க அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.


Next Story