அண்ணா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க மாட்டேன் -அண்ணாமலை பேட்டி


அண்ணா குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க மாட்டேன் -அண்ணாமலை பேட்டி
x

அண்ணா குறித்து தான் தவறாக பேசவில்லை என்றும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அண்ணாமலை கூறினார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் சொல்வதுபோல பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் எந்த சதியும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் எப்படி சதி என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்?. அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதுபோன்று பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையேயும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

கூட்டணி

பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள் எங்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மத்தியில் பிரதமர் மோடி என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறி வருகிறார். அவரது கருத்துக்கும், அ.தி.மு.க. தலைவர்கள் கருத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். எனது கொள்கை தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். கூட்டணி தொடர்பாக கட்சியின் தலைவர்கள்தான் முடிவு சொல்வார்கள். நான் எப்போதுமே தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய மாட்டேன். எனது தன்மானத்தை கேள்விக்குறியாக்கினால் கண்டிப்பாக நான் பேசுவேன்.

மன்னிப்பு கேட்க மாட்டேன்

மது ஒழிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் அறிஞர் அண்ணா. அவர் குடும்ப அரசியலையும் எதிர்த்தார். அண்ணா குறித்து சரித்திரத்தில் உள்ளதைதான் நான் பேசினேன். அவரை ஒருபோதும் தரக்குறைவாகவோ, தவறாகவோ பேசவில்லை. இதனால் நான் எக்காரணத்தை கொண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

தி.மு.க. ஒரு விஷமான கட்சி. அதை நான் அடியோடு வெறுக்கிறேன். சனாதனம்தான் எங்களின் உயிர் நாடி, அதுதான் எங்களின் வாழ்க்கை கோட்பாடு.

5 மாநிலங்களில் இந்தியா கூட்டணி இல்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரியாது. அது முரண்பாடான கூட்டணி.

ஆனால் எங்கள் கூட்டணி அப்படி அல்ல. நாங்கள் பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்வைத்து உள்ளோம். எனவே 3-வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story