3 ஆயிரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா வைரசின் 4-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 194 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காலை முதலே தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முகாம்களுக்கு வரத்தொடங்கினர். முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
1½ லட்சம் பேருக்கு...
மேலும் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3-ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவின் 4-ம் அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தியூர்
அந்தியூர் வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சதீஷ் குமார் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அந்தியூர் வட்டாரத்தில் மொத்தம் 189 இடங்களில் கொரோனா சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 106 மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு 765 பேர்களுக்கு முதல், 2-ம் மற்றும் பூஸ்டர் தவணை ஊசிகள் செலுத்தினர்.