850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் செலுத்திக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் விடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி ஊசி செலுத்திக் கொள்ளும் வகையில் 850 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 84 சதவீதம் நபர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி 69 சதவீதம் நபர்களும் செலுத்தியுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கோவிஷீல்டு 45 ஆயிரத்து 350, கோவாக்சின் 41 ஆயிரத்து 190, கார்பெவாக்ஸ் 34 ஆயிரத்து 640 என மொத்தம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 180 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

செலுத்திக்கொள்ள வேண்டும்

18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 481 நபர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 95 ஆயிரத்து 321 நபர்களும் உள்ளனர். இவர்கள் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story