மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை


மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை
x

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.

கொரோனா தடுப்பு ஒத்திகை

கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் முககவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை பரிசோதித்து அறிவதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. அதன்படி தமிழகத்திலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடந்தது.

கொரோனா சிறப்பு வார்டு

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 30 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டை டீன் பார்வையிட்டார். மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் தேவை உள்ளிட்டவை தயாராக வைத்திருந்தனர்.

இதுகுறித்து டீன் முருகேசனிடம் கேட்டபோது, 'திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் கடந்த வாரம் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 2 பேர் குணமடைந்துவிட்டனர். 89 வயது முதியவர் ஒருவர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். 30 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போது 100 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்வதற்கும் தயாராக உள்ளோம். தேவையான மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பில் உள்ளது. நிலைமையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறோம்' என்றார்.


Related Tags :
Next Story