பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை


பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை
x
தினத்தந்தி 25 March 2023 6:45 PM GMT (Updated: 25 March 2023 6:47 PM GMT)

கடலூரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 479 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக "சகி" என்ற பெயரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது.

இந்த மையத்தில் தனிப்பட்ட இடங்கள், பொது இடங்கள் அல்லது குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகை வன்முறைகளினால் பாதிக்கப்படும் பெண்கள் அந்த வன்முறைகளில் இருந்து மீண்டு சமூகத்தில் சிறப்பாக வாழ்வதற்கு அவசர நடவடிக்கையாக உடனடி மீட்பு பணி, காவல் உதவி, மருத்துவ உதவி, சட்ட உதவி, மன நல ஆலோசனை மற்றும் 3 வேளை உணவு ஆகியவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

இணக்கமான சூழ்நிலை

மேலும் வயது, இனம், சாதி, மதம், கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாசார பாகுபாடின்றி பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு தேவையான சேவைகளையும் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் மட்டும் தொடர்புடைய சமூகத்தினரை சந்தித்து உரையாடுவதன் மூலம் இணக்கமான சூழ்நிலை உருவாகி குடும்பத்தில் இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வழங்கப்பட்ட சேவைகளாக, 2019 அக்டோபர் முதல் பிப்ரவரி 2023 வரை தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் 833 தகவல்கள் வர பெற்றதில் உடனடியாக மீட்பு செய்தும், 199 பேருக்கு காவல் துறை உதவி, 24 பேருக்கு சட்ட உதவியும், 10 பேருக்கு மருத்துவ உதவியும், 60 பேருக்கு தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் குறுகிய கால தங்கும் விடுதிகளில் சேர்க்கப்பட்டும், 479 நபர்களுக்கு ஆலோசனைகளும், 43 பேருக்கு ஒருங்கிணைந்த சேவை மையத்திலேயே உணவுடன் கூடிய தங்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளலாம்

ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கி வரும் அலுவலகங்கள், அருகில் உள்ள காவல் நிலையம், நீதி மன்றங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாகவோ அல்லது 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசின் இலவச தொலைபேசி எண் 181-ஐ தொடர்பு கொண்டு சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக விவரங்கள் தேவைப்படின், மைய நிர்வாகி, ஒருங்கிணைந்த சேவை மையம், அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகம் கடலூர் என்ற முகவரியிலும், 24 மணி நேரமும் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலக எண் 04142 231235, 9150057012 மற்றும் osccud19@gmail.com இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story