மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
x

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. சிறப்பு பிரிவில் 73 பேர் சேர்ந்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. சிறப்பு பிரிவில் 73 பேர் சேர்ந்தனர்.

மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

ஆனால், நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முதல் கலந்தாய்வு தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் www.govtarts collegeooty.org.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று காலை 9.30 மணி முதல் 11 மணி வரை முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி., மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

ஆணைகள்

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேரில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். நேரடி கலந்தாய்வு நடந்த முதல் நாளான நேற்று 73 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவில் 13 பேர், மாற்றுத்திறனாளிகள் 6 பேர், முன்னாள் ராணுவத்தினர் 6 பேர், ஒரு என்.சி.சி. மாணவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான சேர்க்கை ஆணைகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எபினேசர் வழங்கினார்.

நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தரவரிசை பட்டியலில் 1 முதல் 1,000 வரை உள்ள மாணவர்களுக்கும், மதியம் 12 மணி முதல் 1,001 முதல் 1,500 வரை உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் 12 மணி வரை 1,501 முதல் 2,500 வரை உள்ள மாணவர்களுக்கும், மதியம் 12 மணி முதல் 2,501 முதல் 3,000 வரை உள்ள மாணவர்களுக்கும் நடக்கிறது.

கலந்தாய்வு

12-ந் தேதி காலை 11 மணி முதல் 3,001 முதல் 4,000 வரை உள்ள மாணவர்களுக்கும், 16-ந் தேதி காலை 10 மணி முதல் 4,001 முதல் 5,000 வரை உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 17-ந் தேதி காலை 9.30 மணி முதல் 5,001 முதல் 5,983 வரை உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.


Next Story