துறை ரீதியான விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயித்த தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு பாராட்டு


துறை ரீதியான விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயித்த தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு பாராட்டு
x

துறை ரீதியான விசாரணைக்கு காலக்கெடுவை நிர்ணயித்து அரசாணை வெளியிட்ட தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உதவிப்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் மீது கடந்த 2008-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, இருவரையும் விடுதலை செய்து 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதையடுத்து தங்களை இடைநீக்கம் செய்த காலத்தை வரன்முறைப்படுத்தி, பதவி உயர்வு வழங்கக்கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

பதவி உயர்வு

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 2021-ம் ஆண்டு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, 'குற்ற வழக்கு விசாரணையையும், துறைரீதியிலான விசாரணையையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என்றபோதிலும், 13 ஆண்டுகள் தாமதமாக 2021-ம் ஆண்டு துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உரிய காரணங்களை அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. எனவே, துறை ரீதியான விசாரணையை ரத்து செய்கிறேன். இருவருக்கும் உரிய பதவி உயர்வை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

பாராட்டு

மேலும், 'துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ள காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி உரிய அரசாணையை பிறப்பித்த தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு தரப்பு வக்கீல்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்' என்றும் நீதிபதி தன் உத்தரவில் கூறினார்.


Next Story