சமூகவளைத்தளத்தில் பரவி வரும் ஆடியோ: கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திராவிடமாடலை ஜீரணிக்க முடியாததால் மலிவான தந்திரங்கள் கொண்டு போலியான ஒலிப்பதிவு வெளியீடு.
சென்னை,
ஆடியோ சர்ச்சை தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராக உறுதுணையாக இருப்பவர் சபரீசன்.
உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மீது எதிர்க்கட்சிகள் கூட குற்றச்சாட்டுகள் வைக்காத நிலையில், இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஒன்றுபட்டு சாதனை படைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
சமூகவலைத்தளத்தில் பரவிவரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
முதல்-அமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் சபீரிசன். இவர்கள் மீது களங்கள் சுமத்த இது போன்ற ஜோடிக்ப்பட்ட ஆடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திராவிடமாடலை ஜீரணிக்க முடியாததால் மலிவான தந்திரங்கள் கொண்டு போலியான ஒலிப்பதிவு வெளியீடு. அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆற்றல்மிகு செயல்வீரரான உதயநிதி குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன்.
என்னை பிரிப்பதன் மூலம் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கும் பிளாக்மெயில் கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பமாக இயங்கி வருகிறோம் என்றார்.