சி.பி.சி.எல். குழாய் உடைப்பால் நாகை மக்கள் பாதிப்பு: தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் -எடப்பாடி பழனிசாமி


சி.பி.சி.எல். குழாய் உடைப்பால் நாகை மக்கள் பாதிப்பு: தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
x

நாகையில் சி.பி.சி.எல். எண்ணெய் குழாய் உடைப்பால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதுகுறித்து தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாகை மாவட்டம், நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள் மற்றும் கப்பல்கள் மூலமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. கப்பல்களுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் வகையில் நாகை நகரம், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தின் கடற்கரை வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உடைப்பு

இந்த நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக செல்லும் குழாயில் கடந்த 2-ந் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால், அதில் இருந்து வெளியேறும் வாயு மற்றும் துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.

நாகை மாவட்டத்தில் எண்ணெய் குழாய் உடைப்பு சம்பவத்தை கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இங்குள்ள குழாய்களை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும், பெட்ரோலிய கழகத்தின் குழாய்கள் இப்பகுதியில் இருக்கக்கூடாது என்றும், அதை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

நிரந்தர தீர்வு

இம்மாதம் 2-ந் தேதி எண்ணெய் குழாய் உடைப்பினால் கச்சா எண்ணெய் கடலில் கலந்து ஏற்பட்ட பாதிப்பை சுற்றுச்சூழல் துறை அமைச்சரோ, மீன்வளத்துறை அமைச்சரோ அல்லது மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளோ சென்று பார்வையிடவில்லை. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக எந்த நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாக களத்திற்கு அனுப்பி, போராட்டம் நடத்துபவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, எண்ணெய் நிறுவனங்களிடம் அவர்களது கருத்துகளை எடுத்துச் சொல்லி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story