பஸ்நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


பஸ்நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2023 7:30 PM GMT (Updated: 17 Jan 2023 7:30 PM GMT)

நாமக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நாமக்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி முதல் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரு நகரங்கள் மற்றும் நகர்புறங்களில் வேலை பார்க்கும் நபர்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த கிராமங்களுக்கு சென்றனர். இவர்கள் எளிதில் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விடுமுறைக்கு சொந்த கிராமங்களுக்கு சென்ற பொதுமக்கள், நேற்று மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பினர். இதேபோல் விடுதிகளில் தங்கி இருந்த மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். இதனால் பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நாமக்கல் பஸ்நிலையத்திலும் நேற்று மாலை கோவை, ஈரோடு, திருச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பதையும், முண்டி அடித்து கொண்டு பஸ்களில் இடம்பிடிப்பதையும் காண முடிந்தது.


Next Story