கடலூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மாணவர்கள் அவதி
கடலூரில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 20 இளங்கலை பாட பிரிவுகளும், 11 முதுகலை பாட பிரிவுகளும் உள்ளன. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் கல்வி பயின்று வருகின்றனர். 131 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களும், 54 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இவர்களை அரசு நிரந்தரம் செய்யாமல், அரசாணை 246, 247, 248 மூலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிகிறது.
வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
இந்த அரசாணையை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று கடலூர் அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். காலை, மாலை என 2 வேளை பாடம் எடுக்கும் கவுரவ விரிவுரையாளர்கள் யாரும் வகுப்புக்கு செல்லாமல் போராட்டம் நடத்தியதால் மாணவ- மாணவிகள் வகுப்பறையில் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
மாணவர்கள் அவதி
குறிப்பாக மாலை நேர வகுப்புக்கு வந்த மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். ஏனெனில் மாலை நேர வகுப்பை கவுரவ விரிவுரையாளர்களே அதிகம் பேர் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.