திசையன்விளையில் ஓட, ஓட விரட்டிவக்கீலுக்கு அரிவாள் வெட்டு-சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது


திசையன்விளையில்  ஓட, ஓட விரட்டிவக்கீலுக்கு அரிவாள் வெட்டு-சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது
x

திசையன்விளையில் ஓட, ஓட விரட்டி வக்கீலை அரிவாளால் வெட்டிய சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் ஓட, ஓட விரட்டி வக்கீலை அரிவாளால் வெட்டிய சினிமா துணை நடிகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வக்கீல்

நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளையைச் சேர்ந்தவர் ராமகனி. இவருடைய மகன் சிவராமன் (வயது 32). வக்கீலுக்கு படித்து முடித்துள்ள இவர் திசையன்விளையில் ஒரு வங்கி அருகில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

தினமும் கடைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், கடையை பூட்டிக்கொண்டு இருந்தார்.

அரிவாள் வெட்டு

அப்போது, அங்கு 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவராமன் தலையில் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து ஓடினார். எனினும் அவரை 2 பேரும் ஓட, ஓட துரத்திச் சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு மளிகைக்கடைக்குள் சிவராமன் தஞ்சம் அடைந்தார். அங்கு புகுந்த மர்ம நபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சிவராமன் கழுத்தில் வெட்ட முயன்றார். ஆனால் அவர் சுதாரித்துக் கொண்டு கையை நீட்டியதால் அரிவாள் வெட்டு அவரது கையில் விழுந்தது. இதில் சிவராமனின் இடது கை மணிக்கட்டு துண்டானது. அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

பொதுமக்கள் பிடித்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் மற்றும் பொதுமக்கள் மளிகைக்கடை முன்பு திரண்டனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், மர்ம நபரிடம் அரிவாளை கீழே போடும்படி கூறினார்கள். ஆனால் அவர் அரிவாளை கீழே போடாமல் இருந்தார்.

தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து அரிவாளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சிவராமனை போலீசார் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம்

பின்னர் மர்மநபரையும், அவருடன் வந்தவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்த செல்வின்ராஜ் மகன் பிரசாந்த் (43), அவரது நண்பர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் (56) என்பது தெரியவந்தது.

மேலும் சிவராமன் நடத்தி வரும் கடை வைத்துள்ள இடம் தொடர்பாக பிரசாந்த் குடும்பத்துக்கும், சிவராமன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சிவராமனை வெட்டிக் கொலை செய்வதற்காக பிரசாந்த் தனது நண்பரான முருகனை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவில் திசையன்விளைக்கு சென்றார். அங்கு வைத்து சிவராமனை அரிவாளால் பிரசாந்த் வெட்டியது தெரியவந்தது. இவர் சினிமா ஸ்டண்ட் துணை நடிகர் ஆவார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது-பரபரப்பு

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story