சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?; பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து


சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?; பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து
x
தினத்தந்தி 25 Jun 2023 9:00 PM GMT (Updated: 25 Jun 2023 9:01 PM GMT)

சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? என்பது குறித்து பொதுமக்கள், அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான்.

'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைத்துள்ளீர்கள், ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க? ...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்க காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

கவனமாக இருக்க வேண்டும்

மரிய ஜேனட் ஜோசி (வக்கீல், திண்டுக்கல்):- விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் இன்றைய காலகட்டத்தில் நமது அன்றாட பணிகள் அனைத்தும் தற்போது கணினிமயமாகிவிட்டது. கையடக்க செல்போனில் கூட நமது வங்கி கணக்கில் சேமிக்கப்படும் இருப்புகளை மற்றவர்களுக்கு அனுப்பி பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடிகிறது. அதேநேரம் சைபர் குற்றங்களும் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தனிநபர், நிறுவனங்கள், அரசுத்துறை என எந்த இடத்திலும் தன் கரங்களை நீட்டும் சைபர் குற்றங்களில் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளன. ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில் அதனை பயன்படுத்தி சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நமது செல்போனுக்கு வரும் தேவையில்லாத 'லிங்க்'களை திறக்காமல் செல்போனில் இருந்து நீக்கி விட வேண்டும்.

விழிப்புணர்வு இல்லை

சுரேஷ் கண்ணன் (கணினி மென்பொருள் நிபுணர், திண்டுக்கல்):- மக்களிடம் ஆன்லைன் பண பரிவர்த்தனை, இணையதள பயன்பாடு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் சைபர் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம். சில நேரங்களில் படித்தவர்கள் கூட சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களால் ஏமாற்றப்பட்டுவிடுகின்றனர். சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடுத்தர மக்களிடம் இல்லாததால் தான் எளிதில் ஏமாறுகின்றனர்.

எனவே நமது செல்போன் எண், ஆதார் அட்டை விவரங்கள், வங்கி கணக்கு விவரங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஆன்லைனில் நாம் பரிவர்த்தனை செய்யாமல் ரகசிய குறியீட்டு எண் குறுந்தகவலாக வந்தாலோ அல்லது அந்த குறுந்தகவல் வந்த சிறிது நேரத்தில் நமது செல்போனில் யாரேனும் தொடர்புகொண்டு அதுகுறித்து கேட்டாலோ ரகசிய குறியீட்டு எண்களை அவர்களிடம் தெரிவிக்கக்கூடாது. இதுபோன்று விழிப்புணர்வுடன் இருந்தாலே சைபர் குற்றங்களை தடுக்கலாம்.

தினேஷ் (கல்லூரி மாணவர், திண்டுக்கல்):- இணையதள பயன்பாடு குறித்து தெரியாதவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. போதிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் விரிக்கும் வலையில் நாம் சிக்காமல் இருக்க முடியும். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அச்சப்படுவார்கள்.

ஆன்லைன் பரிவர்த்தனை

ராஜா (தனியார் நிறுவன ஊழியர், நத்தம்):- வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தற்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இணையதளம் குறித்த முழுமையான புரிதல் இல்லாதவர்கள் கூட தற்போது இந்த செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நபர்களை தான் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் இலக்காக தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களும் மோசடி நபர்கள் விரிக்கும் வலையில் எளிதில் சிக்கிவிடுகின்றனர். எனவே இணையதள பயன்பாடு குறித்து முழுமையாக அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்துவது நல்லது.

சுமதி (கல்லூரி மாணவி, நத்தம்):- சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தற்போது உள்ளது. பெண்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது அவற்றை மோசடி நபர்கள் தவறாக பயன்படுத்திவிடுகின்றனர். இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து புகார் கொடுத்தாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் வசிக்கும் இடங்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கே சவாலாக இருக்கிறது. ஏனென்றால் மோசடி நபர்கள் இணையதளத்தை தங்களின் கவசமாக பயன்படுத்துகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேநேரம் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபடும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வடமாநிலத்தவர்கள்

இதுகுறித்து திண்டுக்கல் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த ஆண்டு மட்டும் 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நடுத்தர மக்களின் ஆசையை தூண்டும் வகையில் கடன் செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இணையதளம் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை இணையதளத்தில் பரவவிட்டு அதன் மூலமும் மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சைபர் குற்றப்பிரிவு சார்பிலும் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றனர்.


Related Tags :
Next Story