'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Sept 2023 1:15 AM IST (Updated: 4 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

முட்புதர்களால் மாணவர்கள் அவதி

நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அணைப்பட்டி சாலையின் இருபுறமும் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே முட்புதர்களை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், நிலக்கோட்டை.

மீண்டும் வேண்டும் வேகத்தடை

வத்தலக்குண்டு சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் அருகில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக மாணவ-மாணவிகள் அந்த சாலையை கடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும்.

-பாண்டி, வத்தலக்குண்டு.

கோணம் மாறிய கண்காணிப்பு கேமராக்கள்

ஆத்தூர் தாலுகா பித்தளைப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அலுவலகத்திற்குள் வந்து செல்பவர்களை வீடியோவாக பதிவு செய்யும் வகையில் அதன் கோணம் இல்லாமல் தரையை பார்த்தபடி மாறி இருக்கிறது. இதனால் அந்த கேமராக்களில் எந்த காட்சிகளும் பதிவாகாது. அவற்றால் அதிகாரிகளுக்கும் எந்த பயனும் இல்லை. எனவே கேமராவின் கோணத்தை மாற்ற வேண்டும்.

-அருள்குமார், பித்தளைப்பட்டி.

சாலை வசதி தேவை

நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் இருந்து மலையூருக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் கரடு, முரடான மலைப்பாதையில் பொதுமக்கள் நடந்து வேண்டிய நிலைமை உள்ளது. மேலும் இந்த பகுதிக்கு ரேஷசன் உள்ளிட்ட பொருட்களை கழுதை மற்றும் குதிரைகள் மூலமாகவே எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அந்த மலைப்பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிதாக மேல் நிலை தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சித்தார்பட்டி.

சாலையில் பள்ளம்

புதுச்சத்திரம்- செம்பட்டி நெடுஞ்சாலையில் கம்பளிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

கிடப்பில் போடப்பட்ட கட்டுமான பணி

போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கான கட்டுமான பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொட்டியை தாங்கும் தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

-ஜெயகிருஷ்ணன், போடி.

குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்

உத்தமபாளையத்தில் 8 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் முறையாக சுத்திகரிக்கப்படாததால் நிறம் மாறி வருகிறது. அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்வதோடு, சுத்திகரித்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பக்ருதீன், உத்தமபாளையம்.

சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

கம்பம் 4-வது வார்டு காமயகவுண்டன்பட்டி சாலையின் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் வழிந்தோடாமல் சாலையை ஆக்கிரமித்து குளம் போல் தேங்கியுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-பெருமாள், கம்பம்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

பழனி அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் கழிவுநீர் காலவாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

- பொதுமக்கள், பழனி.


Related Tags :
Next Story